×

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு கோர்ட்டில் ஆஜராகாத ஐஜிக்கு பிடிவாரன்ட்

கோவை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத ஐஜிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. இந்த மோசடி வழக்கில் அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட இயக்குனர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அப்போதைய தமிழ்நாடு மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமார் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் மோகன்ராஜ், ஜான் பிரபாகரன், செந்தில்குமார் ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று கோவை இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு பதிவிற்காக தொடர்ந்து பிரமோத்குமார் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். ஐஜி பிரமோத்குமாரை வரும் 27ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது பிரமோத்குமார் கரூர் காகித ஆலை ஐஜியாக பணியாற்றி வருகிறார்.

The post பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு கோர்ட்டில் ஆஜராகாத ஐஜிக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Bazi financial ,IG ,Coimbatore ,Basi financial ,Tirupur ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார்...